Skip to main content

Sexual and gender-based harassment: know your rights (brochure)

பாலியல், பாலின அடிப்படையிலான தொந்தரவு என்பன பாகுபாட்டின் வகைகளாகும். அவை ஒருவரது கௌரவத்தைப் பாதிக்கலாம், பாதுகாப்பற்றவர்களாக அவர்களை உணரச் செய்யலாம், தமது முழு உள்ளார்ந்த ஆற்றலை எய்துவதிலிருந்து அவர்களைத் தடுக்கலாம். பால், பாலினம் அல்லது பாலியல் போக்கு என்பன காரணமாக ஒருவருக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தல் அல்லது அடாவடித்தனம் செய்தல் ஏற்புடையதல்ல. இது சட்ட விரோதமானது.

பெரும்பாலும், அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் இத்தொந்தரவைச் செய்கிறார். ஆனால் சகபாடிகள், சகபணியாட்கள் போன்றோரிடமிருந்தும் இது வரக்கூடும். இதற்குப் பெருமளவில் பலியாகக்கூடியவர்கள் பெண்கள். அவர்கள் பொதுவாகக் குறைந்த வேதனத்தையும், குறைந்த அந்தஸ்தையும் உடைய வேலைகளில் இருப்பதுடன், அனேகமாக பிள்ளைகளது ஏக வழங்கியாக இருப்பதும் காரணமாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள்கூட, பாலியல் தொந்தரவுக்கு இரையாகலாம்.

பாலியல் தொந்தரவு என்றால் என்ன?

ஒன்ராறியோ மனித உரிமைகள் விதியின் கீழ், “வரவேற்கத்தக்கதல்லது எனத் தெரிந்த அல்லது தெரிந்திருக்க வேண்டிய ஒரு கவலை தரக்கூடிய கருத்துரைப்பு அல்லது நடத்தை கொண்ட செயல்முறை ஒன்றில் ஈடுபடுதல்” பாலியல் தொந்தரவாகும். சில சந்தர்ப்பங்களில், ஒரு சம்பவமே பாலியல் தொந்தரவுக்குப் போதுமான தீவிரத்தைக் கொண்டிருக்கலாம். பாலியல் தொந்தரவு பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:

  • பரீட்சைப் புள்ளியை உயர்த்த வாய்ப்பளித்தல், வேலையில் சம்பள உயர்வுக்கு அல்லது பதவி உயர்வுக்கு வாய்ப்பளித்தல் அல்லது உங்கள் அடுக்குமாடி இருப்பிடத்திற்குத் தேவையான திருத்த வேலைகளை நிறுத்தி வைத்தல் போன்றவற்றிற்கு மாற்றீடாக, பாலுறவைக் கேட்டல்
  • காதல் சந்திப்புக்குக் கேட்டலும் 'இல்லை' என்றொரு பதிலை ஏற்க மறுத்தலும்
  • அரவணைப்புகளுக்கு வற்புறுத்தல்
  • வேண்டாத தொடுகை உட்பட, தேவையற்ற உடலியல் தொடர்புகளைச் செய்தல்
  • முரட்டுத்தனமான அல்லது அவமானப்படுத்தும் மொழியினைப் பாவித்தல் அல்லது பெண்பிள்ளைகள், பெண்கள், ஆண்பிள்ளைகள் அல்லது ஆண்களை வகைமாதிரிப்படுத்தும் விதமான கருத்துரைப்புச் செய்தல்
  • ஆட்களை அவர்களது பாலியல் அல்லது பாலினம் சார்ந்த, இரக்கமற்ற பெயர்கள்    சொல்லி அழைத்தல் 
  • ஒருவரது உடலியல் தோற்றம் குறித்து கருத்துரைத்தல் (உதாரணமாக – அவர்கள் கவர்ச்சியாக உள்ளார்களா அல்லது இல்லையா என)
  • பாலியல் பாத்திர வகைமாதிரிக்குள் ஒருவர் அடங்கமாட்டார் என நீங்கள் நினைப்பதால், ஒன்றைச் சொல்லுதல் அல்லது செய்தல்
  • ஆபாசப் படைப்புகள், பாலியற் படங்கள், கேலிச் சித்திரங்கள், சுவர்ப்படங்கள் அல்லது பாலியல் உருவங்கள் (இணையத்தளம் உட்பட) ஆகியவற்றை இடுதல் அல்லது பகிர்தல்,
  • பாலியல் கேலிகளைச் சொல்லுதல்
  • பாலியல் வல்லமைகள் பற்றிப் பெருமையடித்தல்
  • பால் அல்லது பாலின அடிப்படையிலான அடாவடித்தனம் செய்தல்
  • பாலியல் கட்டுக்கதைகளை அல்லது வம்புப் பேச்சுக்களைப் பரப்புதல் (இணையத்தளம் உட்பட)

பாலியல் தொந்தரவு பாலியல் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்றில்லை. ஒரு ஆண் (அல்லது சிறுவன்) அல்லது பெண் (அல்லது சிறுமி) நடந்துகொள்வது, பார்ப்பது அல்லது உடுத்திக்கொள்வது போன்று நீங்கள் இல்லை என அவர்கள் நினைப்பதால், சிலர் உங்களைத் தொல்லை செய்தலையும் இது குறிக்கலாம்.

நீங்கள் ஒரு எல்ஜிபிரி  ( LGBT) (ஒரினச்சேர்க்கைப் பெண், ஒரினச்சேர்க்கை ஆண், இருபாலினம், மாற்றுப் பாலின நம்பிக்கையாளர்) என்பதாலும் சிலர் உங்களைத் தொந்தரவுப்படுத்தலாம்

உங்கள் உரிமைளை அறிந்து கொள்க

பாலியல் தொந்தரவு உட்பட - பாலியல் அடிப்படையிலான பாகுபடுத்தலில் இருந்து விடுபட்டிருக்கும் உரிமை, ஒவ்வொருவருக்கும் உண்டு என ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டவிதி (The Ontario Human Rights Code ) கூறுகிறது. ஐந்து 'சமூக' பரப்புகளுக்கு இச்சட்டத் தொகுதி பொருந்தும்:

  • சேவைகள், பொருட்கள், வாய்ப்பு வசதிகள் (கல்வி உட்பட)
  • குடியிருப்பு
  • ஒப்பந்தங்கள்
  • வேலைவாய்ப்பு
  • வணிக தொழிற்சங்கங்கள் போன்ற தொழில்சார் அமைப்புகளில் அங்கத்துவம்

ஒருவர் பாலியல் தொந்தரவு குறித்துக் குரல் எழுப்பும்போது சிலவேளைகளில் 'பழிவாங்கலை' அல்லது தண்டனையை அனுபவிக்கக் கூடும். ஒருவர் பாலியல் முன்னெடுப்பு அல்லது (காதல் சந்திப்பு ஒன்றுக்கு கோருதல் போன்ற) பாலியல் முன்மொழிவு என்பவற்றை மறுத்தமைக்காக, அவரிடம் ஆத்திரம் கொண்டிருத்தல், மிகையான கூர்நோக்கு (உதாரணமாக, பணியிடத்தில்), சமூக ரீதியாகத் தவிர்த்தல் அல்லது ஏனைய எதிர்மறையான நடத்தை போன்றவற்றை உள்ளடக்கும் பழிவாங்கலை இச்சட்டவிதி தவிர்க்கின்றது.

உதாரணம்: வாடகைக்கு விட்டவர் ஒருவர், தனது பாலியல் முன்னெடுப்புகளுக்கு மறுப்புத் தெரிவித்தமைக்காக இளம் ஒற்றைத் தாயார் ஒருவரை வெளியேற்றியபோது, அவர் பாலியல் தொந்தரவு, பாலியல் வலிந்தழைப்பு, பழிவாங்கல் என்பவற்றில் ஈடுபட்டார் என ஒரு இணக்கமன்று கண்டறிந்தது.

ஒரு மீறலாக இருப்பதற்காகவோ அல்லது இச்சட்டவிதியின்கீழ் உங்கள் உரிமைகளைக் கோரிக்கொள்வதற்காகவோ, தொந்தரவு இடம்பெறும்போது அதற்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தேவையில்லை. நீங்கள் பலியாகக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கலாம், அல்லது வெளியில் பேசப் பயப்படக்கூடும். மறுப்புத் தெரிவித்தால் என்ன நடக்கும் என்ற கவலை காரணமாக, சிலர் தொந்தரவைச் சகித்துக்கொள்ளக் கூடும். ஆனால் இச்சந்தர்ப்பங்களிலும் இது பாலியல் தொந்தரவுதான் என்பதுடன், இது சட்ட விரோதமானதும் கூட.

உதாரணம்: ஒரு இளம் பெண் குடியிருப்பாளர்மீது, ஒரு கட்டட முகாமையாளர் மேற்கொண்ட பொருத்தமற்ற நடத்தை காரணமாக அக்கட்டட முகாமையாளரும் கட்டட முகாமை நிறுவனமும் பாலியல் தொந்தரவுக்குப் பொறுப்பெனக் காணப்பட்டனர். தேவையற்ற பாலியல் கருத்துரைப்புச் செய்ததுடன், அவள்மீது ஒரு நட்புறவைத் திணிக்கவும் முயற்சித்தார். அத்துடன் அவரது பாலியல் செயற்பாட்டின்போது, பொதுவான நடைபாதையில் தனது அறைக் கதவைத் திறந்து வைத்திருத்தலையும் அவரது 'திறந்த கதவு' கொள்கை உள்ளடக்கியிருந்தது.

பாலியல் தொந்தரவு சூட்சுகமாகவும் இருக்கலாம்:

உதாரணம்: ஒரு வேலைவழங்குபவர் ஒரு வேலையாளது உடலியல் தோற்றம் குறித்து 'ஓ நீ இன்று அழகாகத் தோன்றவில்லையா, நீ அந்த உடையை அணிதலாகாது, அது உனக்குப் பொருத்தமில்லை, அந்த நைலோன்கள் அந்தப் பாவாடையுடன் ஒத்துப் போகவில்லை...' என மீண்டும் மீண்டும் பேசி, அவளைப் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதாக ஒரு இணக்கமன்று கூறியது.

அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து பாலியல் முன்னெடுப்புகள் அல்லது கருத்துரைகள் வரலாம்:

உதாரணம்: ஒரு மாணவியை மின்னஞ்சல் வழியாகப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதற்காக, ஒரு 29 வயதுடைய ஆசிரியரின் அனுமதிப் பத்திரத்தை ஆசிரியர்களின் ஒன்ராறியோ கல்லூரி (The Ontario College of Teachers ) திருப்பிப் பெற்றது. அந்த ஆசிரியர் போலிப் பெயர் ஒன்றைப் பயன்படுத்தி, அந்த மாணவிக்கு அவள் அன்று அணிந்த ஆடை, பாடசாலை நோக்கி அவள் மேற்கொண்ட பாதை, பாலியல் ஆலோசனைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய செய்திகளை அனுப்பினார்.

உதாரணம்: மேற்பார்வை செய்யும் காவல் துறை அதிகாரி ஒருவர் இளம் பெண் அதிகாரி ஒருத்தியை நோக்கி பாலியல் முன்னெடுப்புகளை மேற்கொள்கிறார். அவள் அதில் ஆர்வம் காட்டாததனால், அவளது பணியை மிகை கூர்நோக்கலுக்கு உட்படுத்தி, தகுதியீனம் எனக் குற்றம் சாட்டி, சக அதிகாரிகள் முன்னிலையில் அவளை 'பொலிஸ் கான்ஸ்ரபிள்' அல்லது 'PC' என்பதற்குப் பதிலாக 'திருமதி' என அழைக்கிறார்.

தொந்தரவானது பாடசாலைகளிலும் ஏனைய பல சூழ்நிலைகளிலும் அடாவடித்தனம் செய்யும் வடிவத்தையும் எடுக்கலாம்.

உதாரணம்: ஓர் எதிராளியைத் துன்புறுத்துவதற்கென, ஒரு சிறுமி பாலியல் ஒழுக்கமற்றவள் என்றும், பாடசாலைக்குப் பின்புறமாக ஆண் பிள்ளைகளுடன் அவள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுகிறாள் என்றும் இன்னொரு சிறுமி கட்டுக்கதை ஒன்றைத் துவக்கி விடுகிறாள்.

உதாரணம்: ஆத்திரமுற்ற பணியாள் ஒருவர் தமது பெண் பணிப்பாளர் பற்றி, நிறுவனத்தின் தலைவரோடு அவள் அந்தரங்க உறவு வைத்திருக்கிறாள் என்றும், 'உயர் பதவியினருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாலேயே' அவள் உயர்ந்துள்ளாள் என்றும் கட்டுக் கதைகளைப் பரப்புதல்.

நீங்கள் என்ன செய்யலாம்

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் தொந்தரவுக்கு உள்ளானால், அதனை நிறுத்துமாறு நீங்கள் அவரைக் கேட்கலாம். அத்துடன் அது நிகழ்வதை நிறுத்த வேண்டிய படிமுறைகளை எடுக்கும்படி அதிகாரத்தில் உள்ள ஒருவரை நீங்கள் கேட்கலாம்.

வேலை வழங்குபவர்கள், வாடகைக்கு விடுபவர்கள், கல்வியாளர்கள், ஒன்ரோரியாவில் சேவைகளை வழங்கும் ஏனையோர்கள் யாவருக்கும், பாலியல் தொந்தரவைத் தடுக்கவும் எதிர்வினையாற்றவும் வேண்டிய படிமுறைகளை எடுக்கவேண்டிய ஒரு சட்ட ரீதியான கடமை உண்டு. அத்துடன் மனித உரிமைகள்சார் விடயங்களை வேறெவரும் எழுப்பாவிடினும், மனித உரிமைகள் மதிக்கப்படுதலை அவர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

வேலை வழங்குபவர்கள், குடியிருப்பு வழங்குபவர்கள், கல்வியாளர்கள், ஏனையோர் யாவரும் மனித உரிமைகளைப் பாதுகாத்து, பின்வருவன ஊடாக உரிமைக் கோரிக்கைகளைத் தடுக்கலாம்: 

  • பாகுபாடு, தொந்தரவு என்பவற்றைக் கையாள்வதற்கான நடைமுறைகளை முன்வைத்தல்
  • மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் வரும்போதெல்லாம் உடனடியாக எதிர்வினையாற்றுதலும் முறைப்பாடுகளை முக்கியமானவையாக எடுத்தலும்
  • பிரச்சினைகளை, முறைப்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கென மூலவளங்கள் கிடைக்கச் செய்தல்
  • பிரச்சினையைத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்தவரிடம் கூறுதல்

தொந்தரவு தொடருமாயின் அல்லது பொருத்தமான முறையில் கையாளப்படாவிடின், ஒன்ராறியோ மனித உரிமைகள் இணக்கமன்றில் (Human Rights Tribunal of Ontario) மனித உரிமைகள் கோரிக்கை ஒன்றை நீங்கள் பதிவு செய்யலாம்.

தொந்தரவு தரும் நடத்தை மோசமடைவதாகவோ அல்லது உங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவோ நீங்கள் கருதினால், காவல் துறையுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு:

பாலியல், பாலின அடிப்படையிலான தொந்தரவைத் தடுக்கவும் வெளிப்படையாகப் பேசவும் நீங்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி மேலும் அறிய, ஒன்ராறியோ

 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Ontario Human Rights Commission) பாலியல், பாலின அடிப்படையிலான தொந்தரவு தடுப்புக் குறித்த கொள்கையை www.ohrc.on.ca  என்ற இணைத்தளத்தில் பாருங்கள்.

ஒன்ராறியோ மனித உரிமைகள் தொகுதி குறித்து மேலும் தகவல்களுக்கு, பாருங்கள்
www.ontario.ca/humanrights

மனித உரிமைகள் கோரிக்கை ஒன்றைத் தாக்கல் செய்வதற்கு -  (விண்ணப்பம் எனப்படும்) ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றுடன் (Human Rights Tribunal of Ontario)  தொடர்பு கொள்ளுங்கள்,
கட்டணமற்ற தொ.பே: 1-866-598-0322
செவிப்புலனற்றோர் தொ.பே: 416-326-2027 அல்லது கட்டணமற்ற தொ.பே:
1-866-607-1240
இணையத் தளம்: www.hrto.ca

ஒரு மனித உரிமைகள் விண்ணப்பம் தொடர்பாக, சட்ட உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால், மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்துடன் (Human Rights Legal Support Centre)  தொடர்பு கொள்க:
கட்டணமற்ற தொ.பே:  1-866-625-5179
செவிப்புலனற்றோர் கட்டணமற்ற தொ.பே:  1-866-612-8627
இணையத் தளம்:  www.hrlsc.on.ca

மனித உரிமைகள்சார் கொள்கைகள், வழிமுறைகள், ஏனைய தகவல்களுக்கு, ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவை (Ontario Human Rights Commission) www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.

ISBN/ISSN
PRINT: 978-1-4435-8782-2 | HTML: 978-1-4435-8783-9 | PDF: 978-1-4435-8784-6