கர்ப்பமுற்ற பெண்ணாக எனது உரிமைகள் எவை?
ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை (Ontario Human Rights Code ), ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிப்பதுடன் அவர்களுக்கு சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குகின்ற ஒரு சட்டமாகும். கர்ப்பம், தாய்ப்பாலூட்டல் உட்பட பால் வேறுபாடு காரணமாக ஒருவருக்கு பாரபட்சம் காட்டுவதை அல்லது அவர்களுக்கு உபத்திரவம் கொடுப்பதை இந்தச் சட்டக்கோவை சட்டத்துக்கு எதிரானதாக்குகிறது.
குடும்ப நிலையை அடிப்படையாக வைத்து, பெற்றோரும் பிள்ளையுமான உறவு நிலையில் இருத்தலுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. இது பிள்ளையைத் தத்து எடுப்பதையும் உள்ளடக்கிறது. திருமண நிலையின் அடிப்படையும் கூடப் பாதுகாக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் இந்த அடிப்படைகள் பாலியல் அடிப்படையுடன் ஒன்றை ஒன்று மேவலாம்.
ஒரு பெண் கர்ப்பவதி என்பதால் பாரபட்சம் காட்டுவது சட்டத்துக்கு முரணானது. ஒரு பெண் கர்ப்பவதியாக இருந்தாள் அல்லது குழந்தை பெற்றாள் அல்லது கர்ப்பம் தரிப்பாள் என்று பாரபட்சம் காட்டுவது கூட சட்டத்துக்கு எதிரானது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதற்கான பாரபட்சமன்றி உங்களுடைய வேலையைத் தொடர்ந்து வைத்திருக்கவும், ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுக்கவும், வாடகை உடன்படிக்கை அல்லது ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும், சேவைகளைப் பெறவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. நடுநிலைமையானவை என சிலர் நினைக்கும் சட்டங்கள் அல்லது கொள்கைகள், கர்ப்பவதியாக இருக்கும் அல்லது கர்ப்பவதியாக இருந்த அல்லது கர்ப்பவதியாக வரக்கூடிய பெண்களுக்கான தடைகளை வகுக்கும் உடல்சார்ந்த பாரபட்சத்துக்கு உட்படாதிருக்கவும் உங்களுக்கு உரிமையுண்டு.
தாய்ப்பாலூட்டல்
பொதுவிடத்தில் ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் உரிமை, தாய்ப்பாலூட்டும் தாயாக உங்களுக்கு உள்ளது. பொதுவிடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்காக உங்களுடைய பிள்ளைக்கு தாய்ப்பாலூட்டலை யாரும் தடுக்கமுடியாது. அதிகம் ஆரவாரமற்ற இடத்துக்கு உங்களைப் போகச்சொல்லிக் கேட்கவோ அல்லது மூடச்சொல்லிக் கேட்கவோ அல்லது உங்களைக் குழப்பவோ அவர்களால் முடியாது.
எங்கே எனது உரிமைகளைப் பயன்படுத்தலாம்?
உங்களுக்கு ஒரு வேலை அல்லது ஒரு தொழிற்சங்கம் இருந்தால் அவை உங்களைப் பாரபட்சமாக நடத்த முடியாது. பாடசாலை போன்ற சேவைகளைப் பாவிக்கும் போதோ அல்லது உங்கள் குடியிருப்பிலோ உங்களுக்கு பாரபட்சம் காட்ட முடியாது. நீங்கள் கர்ப்பவதியாக இருக்கிறீர்கள் அல்லது கர்ப்பவதியாகப் போகிறீர்கள் என்றோ அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்து இப்போது பிள்ளைகள் இருக்கிறது என்றோ வாடகைக்கு விடுபவர் ஒருவர், குடியிருப்பு வசதிகள் தராமல் விட முடியாது. இது வயது வந்தோருக்கு மட்டும் என்ற சட்டமுள்ள கூட்டுரிமை வீடுகளையும் (condominium) ஏனைய கட்டிடங்களையும் உள்ளடக்கலாம். செய்வதற்கு மிகுந்த கஷ்டம் என்றில்லாவிட்டால், இந்தவகையான எல்லா இடங்களிலும் உங்களுடைய கர்ப்பம் சம்பந்தமான எந்தத் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
வேலையில் எனது உரிமைகள் என்ன?
ஒரு நேர்முகப் பரீட்சையில், வேலை தருபவர் ஒருவர்
- நீங்கள் கர்ப்பவதியா
- உங்களுக்குக் குடும்பம் உள்ளதா
- குடும்பம் ஒன்றை அமைக்க நீங்கள் திட்டமிடுகிறீர்களா
என்று கேட்பது சட்டத்துக்கு விரோதமானது ஆகும்.
நீங்கள் கர்ப்பவதியாக இருந்தீர்கள், அல்லது இருக்கிறீர்கள் அல்லது கர்ப்பம் தரிக்கலாம் என்று உங்களை வேலை நீக்கம் செய்வதோ அல்லது பதவி இறக்கம் செய்வதோ அல்லது வேலையிருந்து நிறுத்தி வைப்பதோ கூட சட்ட விரோதமானதாகும். நீங்கள் கர்ப்பம் தரிக்கத் திட்டமிட்டால் என்ன, அல்லது கர்ப்பவதியாக இருந்தால் என்ன, அல்லது கர்ப்பவதியாக இருந்திருந்தால் என்ன, உங்களுக்கு வாய்ப்புக்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் சம உரிமை இருக்கிறது.
வேலை தருபவர் கட்டாயமாக, உங்களுடைய சூழலைப் பாரபட்சமற்ற சூழலாக்க வேண்டும். உங்களுக்கு வேலை தருபவரோ அல்லது உங்களுடன் வேலை செய்பவர்களோ அல்லது வாடிக்கைக்காரர்களோ, உங்களுடைய கர்ப்பம் பற்றித் தெரிவிக்கும் அவமதிக்கும் கருத்துக்களிலிருந்து விலகியிருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. கர்ப்பத்துடன் தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு. இது கர்ப்பமாக உள்ள போது அதிக கழிவறை இடைவேளைகளை அல்லது உங்களுடைய வேலைக் கடமைகளில் மாற்றத்தை உள்ளடக்கலாம்.
உங்களுடைய பிள்ளை பிறந்த பிறகு, தாய்ப்பாலூட்டலுக்கு அல்லது உங்களுடைய பிள்ளைக்கு பாலுட்ட உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறதோ அதை உங்களுக்கு வேலைதருபவர் கட்டாயமாகத் தர வேண்டும்.
சேவைகளில் எனது உரிமைகள் என்ன?
சேவைகளும் கட்டாயமாகப் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது பின்வரும் துறைகளுக்கும் பொருந்தும்:
- உணவகங்களும் சிற்றுண்டிச்சாலைகளும்
- கடைகளும் கடைத்தொகுதிகளும்
- பாடசாலைகள்
- பூங்காக்கள்
- பொதுப் போக்குவரத்து (public transit)
குடியிருப்புத் தேவைகளை பெற்றுக்கொள்ள சேர்ந்து தொழிற்படல்
குடியிருப்புக்கள், சேவைகள், வேலைவாய்ப்பு என்பன, கர்ப்பமாக உள்ள, கர்ப்பமாக இருந்த அல்லது கர்ப்பம் தரிக்கக் கூடிய, பெண்களை உள்ளடக்கக் கூடியதாகத் தான் வடிவமைக்கப்பட வேண்டும். உங்களுடைய தேவையை நிறைவேற்றுவதற்கு உங்களுக்கு வேலை வழங்குபவர், குடியிருப்பு வழங்குபவர் அல்லது சேவை வழங்குபவருடன் நீங்களும் சேர்ந்து தொழிற்பட வேண்டும். உங்களுக்கு மருத்துவ அல்லது வேறு விசேட தேவைகள் இருந்தால் இவற்றை விளங்கப்படுத்த வேண்டியது உங்களுடைய கடமையாகும். உங்களுக்கு என்ன தேவை, எவ்வளவு காலத்துக்குத் தேவை எனத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக, பதிலுக்கு, தேவைப்பட்டால் அவற்றை ஆதாரப்படுத்த மருத்துவத் தகவல்களை தரும்படி உங்களுக்கு வேலை தருபவரோ அல்லது குடியிருப்புத் தருபவரோ உங்களைக் கேட்கலாம் (ஆனால் பொதுவாக மருத்துவ நிலை பற்றிய விபரங்களை நீங்கள் கொடுக்க வேண்டிய தேவை இல்லை)
எனது விசேட தேவைகள்
நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்புகிறீர்கள் அல்லது கர்ப்பம் தரித்துள்ளீர்கள், அல்லது உங்களுக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்துள்ளது என்பதால் உங்களுக்கு விசேட தேவைகள் இருக்கலாம். விசேட தேவைகள் பின்வரும் காரணங்களினாலும் ஏற்படலாம்:
- உங்களுடைய கர்ப்ப காலத்தில் அல்லது குழந்தைப் பிறப்பில் இருந்த பிரச்சனைகள்
- கருச்சிதைவு
- கருவழிப்பு
- கருவுறுதிறனுக்கான சிகிச்சைகள்
- பிள்ளைப்பேறுக்கு அல்லது செத்துப்பிறந்த (stillbirth) பின்னான நியாயமான ஒரு மீட்சிக் காலம்
- உங்கள் பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்டல்
- இறப்பு / இழவு (bereavement)
கர்ப்பமாயிருத்தலால், விசேட தேவைகள் உள்ள பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய சட்டரீதியான கடமை, வேலை தருபவர்களுக்கும் சேவை வழங்குபவர்களுக்கும் உள்ளது. பூர்த்தி செய்தலின் அளவில் மிகவும் இன்னல் இருந்தால் மட்டுமே அதற்கு விதிவிலக்குண்டு. இது ஒரு சட்டப் பரிசோதனை, அத்துடன் வேலை தருபவர், தேவையைப் பூர்த்தி செய்தல் மிகவும் செலவுக்குரியது என்று அல்லது அது பாரதூரமான ஆரோக்கிய, பாதுகாப்பு ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று நிரூபிக்க வேண்டும்.
வேலைவாய்ப்புடன் தொடர்பான ஏனைய சட்டங்கள்
வேலைவாய்ப்புத் தரச் சட்டம் 2000 ( Employment Standards Act 2000), கர்ப்பத்துக்கும், பெற்றோருக்குரிய விடுப்புக்கும் உங்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. தொழில் அமைச்சின் வேலைமதிப்பீடுகள் கிளை ( The Ministry of Labour’s Employment Standards Branch (1-800-531-5551) ) வேலைத் தரம் பற்றி மேலதிகத் தகவல்களைத் தரலாம்.
கனடா மத்திய அரசின் மனித வளமும் திறன்கள் அபிவிருத்திக்குமான பிரிவு (The federal government’s Human Resources and Skills Development Canada (1-800-206-7218)), தாய்மை நிலையின் போதும் பெற்றோருக்குரிய விடுப்பின் போதும் கிடைக்கக் கூடிய வேலைக்காப்புறுதி நன்மைகளைப் பற்றிய தகவல்களைத் தரலாம்.
மேலும் தகவல்களுக்கு
கர்ப்பத்தாலும் தாய்ப்பாலூட்டலாலும் பாரபட்சம் பற்றிய ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (The Ontario Human Rights Commission) கொள்கைகள், போன்ற ஏனைய வெளியீடுகள் www.ohrc.on.ca
மனித உரிமைகள் பற்றிய முறையீடு செய்ய – மனுப் போட – ஒன்ராரோரியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றைத் (Human Rights Tribunal of Ontario) தொடர்பு கொள்ள :
கட்டணமற்ற சேவை (Toll Free): 1-866-598-0322
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற சேவை (TTY Toll Free): 1-866-607-1240
இணையத்தளம் (Website): www.hrto.ca
உங்களுக்கு சட்ட உதவி தேவையாயின் மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்தை (Human Rights Legal Support Centre) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற சேவை (Toll Free): 1-866-625-5179
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற (TTY Toll Free): 1-866-612-8627
இணையத்தளம் (Website): www.hrlsc.on.ca