வசிப்பிடம் ஒரு மனித உரிமை
கனடா நாட்டிலுள்ள மக்கள், அவர்களால் பணம் செலுத்த முடிந்தளவுக்கான நல்ல வசிப்பிடத்தைக் கொண்டிருக்கவேண்டும் என சர்வதேசச் சட்டம் சொல்லுகிறது. ஒன்டாரியோவில் இதைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக, குடியிருப்பாளர்கள் மற்றும் நிலச் சொந்தக்காரர் (அல்லது வீட்டை வாடகைக்கு விடுபவர்கள்) களுக்கு மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உரிமைகள் அல்லது பொறுப்புகள் இருக்கின்றன.
ஒரு குடியிருப்பாளராக, வசிப்பிடத்தில் பாகுபாடு காட்டப்படுதல் மற்றும் தொந்தரவு இல்லாமல் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது.
பின்வரும் காரணங்கள் இருப்பதனால் ஒரு அப்பாட்மன்ட் உங்களுக்கு மறுக்கப்படக்கூடாது; வசிப்பிடம் வழங்குபவரால் அல்லது வேறு குடியிருப்பாளர்களால் நீங்கள் தொந்தரவு செய்யப்படக்கூடாது; அல்லது அநியாயமாக நடத்தப்படக்கூடாது:
- சாதி, நிறம் அல்லது இனப் பின்னணி
- மத நம்பிக்கைகள் அல்லது நடைமுறைகள்
- பரம்பரை, பூர்வீகக் குடிவழி வந்தவர்கள் உட்பட
- பிறப்பிடம்
- பிரஜா உரிமை, அகதி அந்தஸ்து உட்பட
- பாலினம் (கருத்தரித்த நிலை மற்றும் பாலின அடையாளம் உட்பட)
- குடும்ப நிலைமை
- விவாக நிலை, ஒத்த பாலினத் துணைவருடன் உள்ளவர் உட்பட
- அங்கவீனம்
- பாலியல் நாட்டம்
- வயது, 16 அல்லது 17 வயதுடையவர்கள் மற்றும் பெற்றோருடன் இனிமேலும் வசிக்காதவர்கள் உட்பட
- சமூக உதவி பெறுபவர்
மேலே அடையாளம் காட்டப்பட்ட ஒருவரின் நண்பர் அல்லது உறவினராக நீங்கள் இருந்தால், அதன் நிமித்தம் பாகுபாடு காண்பிக்கப்படும்போது நீங்களும் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
வசிப்பிட உரிமைகள் எங்கே பொருந்தும்?
வசிப்பிடத்தை விலை கொடுத்து வாங்கும் அல்லது வாடகைக்கு எடுக்கும் ஒவ்வொரு அம்சத்துக்கும் சட்டத் தொகுப்பு பொருந்தும். வசிப்பதற்காக ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்கும்போது, சட்டத் தொகுப்பு பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
- ஒரு யூனிட்டை வாடகைக்காக விண்ணப்பித்தல்
- குடியிருப்பாளரின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள்
- பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு
- சம்பந்தப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளை உபயோகித்தல்
- நீங்கள் வாடகைக்கு எடுக்கும் இடத்தைப் பற்றிய உங்கள் பொதுவான மகிழ்ச்சி
- வெளியேற்றப்படுதல்.
குடியிருப்பாளர்களைத் தெரிவுசெய்தல்
நிலச் சொந்தக்காரர்கள், குடியிருப்பாளர்களைத் தெரிவு செய்யும்போது எதைக் கேட்கலாம் என சட்டத் தொகுப்பு சொல்கிறது:
- வாடகை பற்றிய வரலாறு, கிரெடிட் பரிந்துரைகள் மற்றும்/அல்லது கிரெடிட் விவரசோதனைகள் கேட்கப்படலாம்.
- வாடகை அல்லது கிரெடிட் பற்றிய வரலாற்றைக் கொண்டிராதது உங்களுகு எதிராகக் கருதப்படக்கூடாது.
- நிலச் சொந்தக்காரர் உங்களுடைய வருமானத்தைப் பற்றி உங்களிடம் கேட்கலாம். ஆனால் உங்களுடைய வாடகை வரலாறு, கடன் பரிந்துரைகள் மற்றும் கடன் பெறும் தரம் அதாவது கிரெடிட் ரேட்டிங் (எக்குவிஃபக்ஸ் கனடா போன்றவை ஊடாக) என்பனவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய தகவல்களையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வேறு தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போதும், மற்றும் வாடகைப் பணம் செலுத்துவதற்குப் போதியளவு பணத்தை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காகவும் மாத்திரம், வருமானம் பற்றிய தகவல்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படலாம்.
- உதவி நிதி வழங்கப்படும் இருப்பிடத்துக்காக நீங்கள் விண்ணப்பித்தாலே தவிர, 30% கட் ஓஃப் ரூள் எனப்படும் வரையறுக்கும் விதி (அதாவது வாடகை அவர்களுடைய வருமானத்தில் 30% க்குக் குறைவானதாகவுள்ள மக்களை மாத்திரம் கவனத்தில் எடுப்பது) போன்ற வாடகை வருமான – விகிதத்துக்காக நிலச்சொந்தக்காரர் விண்ணப்பிப்பது சட்டவிரோதமானது.
- நிலச் சொந்தக்காரர் எல்லாக் குடியிருப்பாளரிடமும் ஒரேவிதமாகக் கேட்பதாகவிருந்தால் மாத்திரம், குத்தகை கையொப்பமிட ஒரு “உத்தரவாதம் அளிப்பவர்” (உங்களால் வாடகைப்பணம் செலுத்தமுடியாவிட்டால் உங்களுக்காக அதைச் செலுத்துவதாக வாக்குக்கொடுக்கும் ஒருவர்) வேண்டுமென உங்களிடம் கேட்கலாம்.
ஒரு அங்கவீனர் அல்லது விசேஷ தேவையுள்ள ஒருவருக்காக உங்களுக்கு வசிப்பிடம் தேவைப்பட்டால்
உங்களுக்கு சட்டத் தொகுப்பின் அடிப்படையிலான நியாயமான தேவைகள் இருக்கும்போது, (அங்கவீனம் அல்லது குடும்ப நிலைமை போன்றவை) அந்த அடிப்படையில், உங்களுக்கு இருக்கக்கூடிய விசேஷ தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வசிப்பிடத்தை உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு சட்ட பூர்வமான கடமை நிலச்சொந்தக்காரருக்கு இருக்கிறது. செலவுகள், நிதியுதவி அளிப்பதற்கான வெளியேயுள்ள வளங்கள் அல்லது உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கான காரணங்கள் என்பனவற்றின் அடிப்படையில், அளவுக் கதிகமான கஷ்டம் என்ற நிலை வரும்வரை உங்களுக்கு உதவ அவர்கள் முயலவேண்டும்.
வசிப்பிடம் நன்கு அமைவதற்காக, நீங்களும் உங்கள் நிலச்சொந்தக்காரரும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றீர்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மற்றும் வசிப்பிடத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு நிலச்சொந்தக்காரருக்குத் தேவைப்படும் ஏதாவது தகவல்களை வழங்கிட நீங்கள் அவருடன் ஒத்துழைக்கவேண்டும். நீங்கள் வழங்கும் ஏதாவது மருத்துவ அல்லது வேறு தனிப்பட்ட தகவல்களை உங்கள் நிலச்சொந்தக்காரர் அந்தரங்கமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக,உங்களுக்கு ஒரு அங்கவீனம் இருந்தால், உங்கள் நிலச்சொந்தக்காரர் உங்களைக் குடியிருக்க வைப்பதற்காக, தொகுதிகள், ஒரு கட்டிடத்தின் நுழை வாயில், நடைபாதைகள் அல்லது வாகனம் நிறுத்தும் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியிருக்கலாம்.
சில குடியிருப்பாளர்களுக்கு, குடும்பச் சூழ்நிலைகள் அல்லது மத அனுஷ்டானங்களுக்காகச் சட்டங்கள் மற்றும் வழக்கமுறைகளை மாற்றியமைக்கவேண்டிய தேவை இருக்கலாம். சிலவேளைகளில் ஒரு குடியிருப்பாளர் சுகவீனமாக இருப்பதால் அல்லது குழப்பங்களை ஏற்படுத்துவதால் (ஒரு அங்கவீனம் காரணமாக அல்லது அவர்களுக்கு பாகுபாடு காண்பிக்கப்பட்டதன் காரணமாக) அவருக்கு உதவி தேவைப்படலாம். அந்த நிலைமையில் தான் எதாவது உதவி செய்யலாமா, இந்த விடயத்தில் தனது பங்களிப்பு என்ன போன்றவை பற்றி நிலச்சொந்தக்காரர்கள் மதிப்பீடு செய்யவேண்டும்.
நிலச்சொந்தக்காரர்கள், அதிகம் பொருத்தமான வசிப்பிடத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக முடிந்தளவு விரைவாக உங்களுடன் ஒத்துழைக்கவேண்டும்.
உங்கள் தேவைகள் மற்றவர்களைப் பாதிக்கும்போது
சிலவேளைகளில் உங்கள் தேவைகள் அல்லது நடத்தைகள் மற்றவர்களைப் பாதிக்கலாம். நிலச்சொந்தக்காரர்கள் மற்றும் வசிப்பிடத்தை வழங்குபவர்கள் சமநிலையுடன் இருந்து எல்லாக் குடியிருப்பாளர்களின் நிஜமான அக்கறைகளைச் சமாளிக்கவேண்டும். ஒரு குடியிருப்பாளரின் நடவடிக்கைகள் குழப்பங்களை உண்டாக்குவதாக இருந்தாலும் (உதாரணமாக, குடும்ப நிலைமைகளின் கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் சம்பந்தமான இரைச்சல்கள்), அந்தச் சூழ்நிலை தீர்வு செய்யப்படமுடியுமா என்பதைப் பார்ப்பதற்குத் தேவையான படிகளை எடுக்கவேண்டும் என ஒரு நிலச்சொந்தக்காரரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டத் தொகுப்பு பொருந்தாத நிலைமைகள்
உங்களுக்கு நிலச்சொந்தக்காரருடன் அல்லது சட்டத் தொகுப்பு அடிப்படையுடன் இணைக்கப்படாத வேறு குடியிருப்பாளருடன் ஒரு “தனி நபர் முரண்பாடு” இருந்தால் அதற்கு சட்டத் தொகுப்பு பொருந்தாது. அத்துடன்,
உரிமையாளர் அல்லது அவரது குடும்பத்தினருடன் ஒரு குளியலறை அல்லது சமையலறையை நீங்கள் பகிர்ந்துகொண்டாலும் சட்டத் தொகுப்பு பொருந்தாது.
மேலதிக தகவல்களுக்கு
வாடகைக் குடியிருப்பில் நிலச்சொந்தக்காரர் மற்றும் குடியிருப்பாளரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, ஒன்டாரியோ ஹியூமன் ரைட்ஸ் கொமிஷனின் (ஒன்டாரியோ மனித உரிமை ஆணையம்) மனித உரிமை மற்றும் வாடகை குடியிருப்பு என்பனவற்றிற்கான கொள்கை . ஐப் பார்க்கவும். இந்த கொள்கை மற்றும் வேறு OHRC தகவல்கள் www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.
மனித உரிமைகள் பற்றிய புகார் ஒன்றைச் செய்வதற்கு
மனித உரிமைகள் புகாரைப் பதிவு செய்வதற்கு (ஒரு விண்ணப்பம் என்றழைக்கப்படும்), ஒன்டாடியோ மனித உரிமைகள் தீர்ப்பாயத்தை (ஹியூமன் ரைட்ஸ் டிரிபியூனல் ஒஃப் ஒன்டாரியோ) பின்வரும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்:
இலவசத் தொலைபேசி : 1-866-598-0322
TTY: 416-326-2027 அல்லது இலவச அழைப்பு: 1-866-607-1240
இணையத்தளம்: www.hrto.ca
உங்கள் உரிமைகள் பற்றிக் கலந்துபேச விரும்பினால் அல்லது மனித உரிமைகள் பற்றிப் புகார் செய்ய உங்களுக்கு சட்ட பூர்வமான உதவி தேவைப்பட்டால் மனித உரிமைகள் சட்ட ஆதரவு மையத்தை (ஹியூமன் ரைட்ஸ் லீகல் சப்போட் சென்டர்) பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்:
இலவசத் தொலைபேசி: 1-866-625-5179
TTY: 416-314-6651 அல்லது இலவச அழைப்பு: 1-866-612-8627
இணையத்தளம்: www.hrlsc.on.ca
வாடகைக் குடியிருப்புக்கான மனித உரிமைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்காக, www.ohrc.on.ca இலுள்ள ஒன்டாரியோ ஹியூமன் ரைட்ஸ் கொமிஷனுடைய (மனித உரிமைகள் ஆணையம்) இணையத்தளத்தை காண்க.