ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை
ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை (The Ontario Human Rights Code ) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதுடன் வேறுபட்ட அடிப்படைகளில் பாகுபாடு நடக்காமல் சுதந்திரமும் அளிக்கிறது. இந்தச் சட்டவிதி வேலைவாய்ப்பு, குடியிருப்பு வசதி, வாய்ப்புக்களும் சேவைகளும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வணிகம் அல்லது வாழ்க்கைத் தொழில்சார்ந்த அமைப்புக்கள் போன்ற துறைகளில் உள்ள ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது.
இந்தச் சட்டக்கோவை, உங்களுடைய குடும்பநிலையின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட துறைகளில் பாகுபாடு நிகழாமல் உங்களைப் பாதுகாக்கின்றது.
குடும்ப நிலை என்றால் என்ன?
ஒரு பெற்றோரும் பிள்ளையும் என உறவு நிலையில் இருப்பதை, குடும்ப நிலை என இந்தச் சட்டவிதி வரைவிலக்கணப்படுத்துகிறது. இது ஒரு பெற்றோரும் பிள்ளையும் வகையான ஒரு உறவு நிலை எனவும் கருத்துப்படலாம், அது இரத்த உறவு அல்லது தத்தெடுக்கும் அடிப்படையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது பராமரிப்பு, பொறுப்பு, கடமை என்பனவற்றின் அடிப்படையில் இருக்கும். பெற்றோர் பிள்ளைகளைப் பாராமரித்தல், ( தத்தெடுத்தலும், வளர்ப்புப் பெற்றோராக அல்லது மாற்றுப் பெற்றோராக இருத்தலும் ) வயது வந்த பெற்றோரைப் பராமரிக்கும் பிள்ளைகள் அல்லது வலுவீனம் உள்ளவர்களைக் கவனிக்கும் சொந்தக்காரர், ஒரினச் சேர்க்கை ஆண்கள், ஒரினச் சேர்க்கை பெண்கள், இருபாலினர். அல்லது பாலியல் மாற்றங்களுக்கிடைப்பட்டோர் போன்றவர்களால் வழிநடத்தப்படும் குடும்பங்கள் போன்றவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.
பாகுபாட்டைத் தடுத்தல்
பாகுபாட்டைத் தடுக்கும் ஒரு முதல் படியாக, வேலை கொடுப்போரும் சேவைகள் வழங்குவோரும் வாடகைக்கு விடுபவர்களும் பொதுமக்களும் குடும்ப நிலை அடிப்படையில் உள்ள மனித உரிமைகள் பிரச்சனைகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களுடைய தேவைகள் அடையாளம் கண்டு கொள்ளப்படாவிட்டால் அல்லது ஆதரிக்காவிட்டால் குடும்ப பராமரிப்பாளர்கள் குடியிருப்பு, தொழில், சேவைகள் போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்கு அனேகமாகத் தடைகளை எதிர்நோக்குவார்கள்.
எமது சமுதாயத்தில் பெருமளவு பராமரிப்பை வழங்கும் பெண்களையும், பாதுகாப்பான தொழில் இல்லாமல் இருக்கக் கூடிய, கட்டுபடியாகக் கூடிய பராமரிப்புச் சேவைகள் அல்லது குடியிருப்பை பெறுவதில் கஷ்டப்படுகின்ற குறைந்த வருமானமுள்ள குடும்பங்களையும் இது விசேடமாகப் பாதிக்கின்றது.
எங்களுடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு நேரத்தில் எங்களில் பெரும்பாலானோருக்கு பராமரிப்பைக் கொடுக்க வேண்டிய அல்லது எடுக்க வேண்டிய தேவையும் எங்களுடைய குடும்ப நிலை உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தேவையும் உண்டு.
வலுவிழப்பு, திருமண நிலை, பால் (கர்ப்பம், பாலூட்டல், பாலின அடையாளம்) பாலியல் நடத்தை. இனம், நிறம், பரம்பரை, சமயம், வயது, சமூக உதவிப்பெறுகை ( குடியிருப்பில்) உட்பட ஏனைய சட்டவிதிகளின் அடிப்படை தொடர்பான பாகுபாட்டிலிருந்தும் தொந்தரவிலிருந்தும் குடும்பப் பராமரிப்பாளர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படைகளின் ஏதாவது ஒன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவருடன் மட்டும் பராமரிப்பாளர் தொடர்புடையவராக இருந்தாலும் இந்த பாதுகாப்பு பொருந்தும்.
ஒரு மனிதன், அசைவதற்கு வலுவற்ற உறவினர் ஒருவருடன் வாழ்ந்து, பராமரிப்புச் செய்தல் ஒரு உதாரணமாகலாம். அவர் குடியிருப்பில் வசதி தொடர்பான முன்னேற்றங்களைக் கேட்கலாம் என்ற பயப்படும் வாடகைக்கு கொடுப்பர் ஒருவரால் திருப்பி அனுப்பப்படல். அந்த மனிதன் தனக்கு வலுவிழந்தவருடன் உள்ள தொடர்பை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு பற்றி ஒரு முறையீடுத் தாக்கல் செய்தல்.
குடும்ப நிலை அடிப்படையிலுள்ள (ஏனைய அடிப்படைகளிலும்) மனித உரிமைகள் பிரச்சனைகளுக்கு ஆட்கள் முகம் கொடுக்கக் கூடிய சில வேறு உதாரணங்கள் ஆவன:
- வாடகை கொடுப்பவர் பிள்ளைகள் உள்ள ஒரு தனிப் பெண்ணுக்கு வாடகைக்கு கொடுக்க மாட்டார் என்பதால் ஒரு தாய் குடியிருப்பை எடுக்கமுடியாமலிருப்பது
- வேலை நேரத்தில் தனது பிள்ளையை மருத்துவ நியமனத்துக்கு கொண்டு போக வசதியாக ஒரு மாற்றக் கூடிய (flexible) வேலைக் காலஅட்டவணையை அவரின் மேலதிகாரி கொடுக்காததால், ஒரு வலுவிழந்த பிள்ளையின் பெற்றோர் தனது வேலையை இழத்தல்.
- தாய்மார்கள், அவர்களுடைய வேலைக்கு அர்ப்பணிப்பு அற்றவர்கள் என அவளின் மேலதிகாரி நம்புவதால் ஒரு பெண்ணுக்கு பதவி உயர்வு மறுக்கப்படல்.
- பாதுகாப்பைப் பங்கிட்டுக் கொள்ளும் (share custody) பெற்றோருள்ள ஒரு பிள்ளைக்கு மாற்றத்துக்கு உட்படக்கூடியதான ஒரு பாடசாலைப் பேரூந்துச் சேவை தேவைப்படல்.
- பெரிய விரிவுபடுத்தப்பட்ட குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று, அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஆட்களின் எண்ணிக்கையால் குடியிருப்புப் பெறுவதில் தடைகளைச் சந்தித்தல்
- இளமையாக இருப்பதாலும் சமூக உதவியில் இருப்பதாலும் ஒரு குடும்பத்துக்கு குடியிருப்பு மறுக்கப்படல்
- ஒரினச் சேர்க்கையுள்ள ஆண் அல்லது பெண் பராமரிப்பாளர் தன்னுடைய துணைவரின் பிள்ளையை அல்லது பெற்றோரை வைத்தியசாலையில் போய்ப் பார்ப்பதற்கான உரிமை அல்லது அந்த ஆளைப் பராமரிப்பதற்கான தேவைக்கு வேலையிலிருந்து விடுப்பு மறுக்கப்படல்.
தொழிலும் குடும்பநிலையும்
ஒரு பெற்றோர் – பிள்ளை வகையான உறவு நிலையில் உள்ள ஆட்களுக்கு வேலையிடத்தில் சமவகையாக நடத்தப்படும் உரிமையுண்டு. ஒருவர், குடும்ப அங்கத்தவர் ஒருவரைப் பராமரிக்கிறார் என்பதற்காக வேலைக்கு எடுப்பதிலோ, பதவி உயர்வு வழங்குவதிலோ, பயிற்சி கொடுப்பதிலோ, நன்மைகளிலோ, வேலையிட நிலைமைகளிலோ அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதிலோ வேலை வழங்குபவர்கள் பாகுபடுத்த முடியாது.
குடும்பப் பராமரிப்பு வழங்குபவர்கள், மற்றவர்களை விடத் தகுதி, அர்ப்பணிப்பு, இலட்சியம் குறைந்தவர்கள் எனப் பிழையாகக் கருதப்படலாம் – அனேகமாக பால் சம்பந்தமான வகை மாதிரிக் காரணத்தால் – அத்துடன் பதவி உயர்வு, கல்விவாய்ப்பு, அங்கீகாரம் என்பனவற்றிலும் தவறவிடப்படலாம். பராமரிப்புக் கடமையுள்ள ஆட்களை, வேலையிடக் கட்டமைப்போ அல்லது கொள்கைகளோ அல்லது நடைமுறையோ அல்லது கலாசாரமோ உள்ளடக்காமல் விடும் போது அல்லது பிரதிகூலம் செய்யும் போது அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மாற்றங்களைக் கருதவேண்டிய சட்டரீதியான கடமை வேலைகொடுப்போருக்கு உண்டு. இது விசேட இடம் கொடுக்கவேண்டிய (accommodate) கடமை எனப்படும்.
இடம் கொடுக்க வேண்டியதற்கான சில உதாரணங்கள் ஆவன:
- மாற்றக்கூடிய காலஅட்டவணை (flexible scheduling) கொடுத்தல்
- வயதான அல்லது நோய் வாய்ப்பட்ட அல்லது வலுவிழந்த குடும்ப அங்கத்தவரைப் பராமரிப்பதற்கு வேலையிலிருந்து விடுப்பு (leaves of absence ) எடுக்க அனுமதித்தல்
- மாற்று வேலை ஒழுங்குகளுக்கு (alternative work arrangements) அனுமதித்தல்.
ஒரு மாற்றக்கூடியதும் வரவேற்புள்ளதுமான வேலையிடத்தை உருவாக்கல் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கக் கூடியது, அத்துடன் வேலைவழங்குவோர் வேலையாட்களை வேலைக்கு எடுக்கவும், தொடர்ந்து வைத்திருக்கவும், மிகவும் திறமையான செயல்திறனைப் பெறவும் உதவும்.
குடியிருப்பும் குடும்ப நிலையும்
பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு அல்லது வேறு பராமரிப்பாளர் உறவுமுறைகளில் உள்ள ஆட்களுக்கு எதிராக குடியிருப்பு வழங்குவோர் பாகுபாடுத்துவதை இந்தச் சட்டவிதி தடுக்கிறது. வாடகைக்கு விடல், வெளியேற்றல், கட்டிட விதிகளும் ஒழுங்குமுறைகளும், பழுதுபார்த்தல், சேவைகளையும் வளங்களையும் பயன்படுத்தல் போன்றவற்றுக்கு இந்த விதி பொருந்தும்.
உதாரணத்துக்கு “ அமைதியான கட்டிடம்” அல்லது “சத்தத்திலிருந்து பாதுகாக்கப்படவில்லை” (“not soundproof”), வயதுவந்தோர் வாழ்க்கைமுறை” (adult lifestyle) போன்ற பதங்களைப் பாவிப்பதன் மூலம், வாடகைக்கு விடுபவர்கள், பிள்ளைகள் இரைச்சலானவர்கள், உடமைகளைச் சேதம் செய்வார்கள் என பிள்ளைகள் உள்ள குடும்பத்தினரது விண்ணப்பத்தை மறுக்கவோ, தடைசெய்யவோ முடியாது. பெற்றோர்கள், பிள்ளைகளின் இரைச்சலைச் சமாளிக்கக் கூடியவர்களாகவும், நல்ல அயலவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அதே நேரத்தில், பிள்ளைகள் போடும் சாதாரண இரைச்சலுக்காக குடும்பங்களைத் தொந்தரவு செய்யவோ, வெளியேற்றவோ முடியாது. பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்குத் தடைகளை ஏற்படுத்தும், சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஏனைய வாடகைக் கொள்கைகள் கீழ்வருவனவற்றை உள்ளடக்கும்:
- ஒரு அலகில் எத்தனை பிள்ளைகள் வாழலாம் போன்ற எழுந்தமானமான குடியிருக்கைத் தரங்கள்
- தங்களுக்கு மாற்றம் தேவையான போது, குடும்பங்களை ஏனைய குடியிருப்புக்களுக்கு இடம் மாற அனுமதியாத கொள்கைகள்
- பொதுவான அல்லது பொழுதுபோக்குப் பகுதிகளுக்கு பிள்ளைகளின் நுழைவுரிமையில் தடைகள்
பராமரிப்பை வழங்குகிறார்கள் அல்லது பெறுகிறார்கள் என்பதற்காக, வாடகைக்கு விடுபவர்களும் ஏனைய குடியிருப்பாளர்களும், எந்தக் குடியிருப்பாளரையும் (அல்லது வாடகைக்கு விண்ணப்பிப்பவரை) பாகுபடுத்த முடியாது. ஒரு பகுதி நேரப் பெற்றோர், ஒரு தனிப் பெற்றோர், கர்ப்பம் தரித்த ஒரு தாய், குடும்பங்கள், சமூக உதவி பெறும் குடும்பங்களும் வலுவிழந்தோர் உள்ள குடும்பங்களும், வயதானோரும், ஒரினச் சேர்க்கை ஆண், ஒரினச்சேர்க்கைப் பெண், இனப்பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட சமுதாய உறுப்பினர்கள், யாவரும் சமமான குடியிருப்பு வாய்ப்புக்களுக்கும் நுகர்வுகளுக்கும் உரிமையுடையவர்கள் ஆவார்கள்.
வாடகைக்கு விடுபவர்கள் கட்டாயமாக:
- நியாயமான முறையில் குடியிருப்பாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டும்
- எல்லாவிதமான குடும்பங்களினதும் பராமரிப்பு உறவுகளினதும் இருப்பிடத் தேவைகளுக்கும் உதவ வேண்டும்
- தடைகளை அகற்ற வேண்டும்
- குடியிருப்பாளர்கள் தொந்தரவுக்குள்ளாகவில்லை என்பதை தீவிரமாக உறுதிப்படுத்த வேண்டும்
மனித உரிமைகளை உறுதிப்படுத்தவும், இந்தத் தேவைகளை நிறைவேற்றவும் கொள்கைகளும் வசதிகளும் கட்டமைப்புக்களும் தரம் உயர்த்தப்பட வேண்டிய தேவை இருக்கலாம்.
சேவைகளும் குடும்பத்தரமும்
தனிமனிதர்கள், வசதிகளையும் சேவைகளையும் பாவிக்கும் போது அவர்களுடைய குடும்ப நிலையால் தடைகளையும் பாகுபாட்டையும் எதிர்நோக்கலாம். சேவை வழங்குபவர்கள், பராமரிப்பாளர்களினதும் அவர்களுடைய குடும்பங்களினதும் விசேடமான தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இது உணவகங்கள், கடைகள், தங்குமிட விடுதிகள், படமாளிகைகள் போன்ற பிரிவுகளுக்குப் பொருந்தும். இது பாடசாலைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கிடங்கள், சமூக சேவைகள், ஏனைய சேவைகள் போன்றவற்றுக்கும் பொருந்தும்.
குடும்பநிலை விசேடஒழுங்குகளுக்கு (accommodations) உதாரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
- பிள்ளைக்கும் தள்ளுவண்டிக்கும் பொருத்தமான வசதிகள்
- வயதைப் பொறுத்தில்லாமல் தேவையை அடிப்படியாகக் கொண்ட, நீச்சல் தடாக, ஏனைய பொழுதுபோக்கிட கால அட்டவணைகள்
- உணவகத்துக்குள் நுழைவதற்கான கொள்கைகள்
- மாற்றமடையக் கூடிய மாணவர் பட்டப்படிப்புத் திட்டங்கள்
- வைத்தியசாலையைப் பார்வையிட ஏற்ற (Inclusive) விதிகள்
குடும்ப நிலையை அடிப்படையாகக் கொண்டு ஆட்களை இலக்காக்கும் விசேட திட்டங்கள், பிரதிகூலத்தை நீக்க அல்லது சம வாய்ப்புக்கு ஊக்கமளிக்க என உருவாக்கப்படப்பட்டால், அவை அனுமதிக்கப்படும்.
விசேட ஒழுங்கு (accommodate) கொடுக்க வேண்டிய கடமை
சட்ட விதியின் கீழ், வேலைவழங்குவோர், தொழிற்சங்கங்கள், வாடகைக்கு விடுபவர்கள், சேவை வழங்குவோர் என எல்லோருக்கும், ஒருவருடைய குடும்ப நிலைமையின் அடிப்படையில் விசேட ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டிய சட்டரீதியான கடமை உண்டு. இதன் இலட்சியம் என்னவென்றால் மிகவும் கஷ்டம் இல்லையென்றால் வேலை வழங்குவோரும் குடியிருப்பாளர்களும் வாடிக்கைக்காரரும் சேவையுறுனரும், வேலையிடத்தில், குடியிருப்பில், வசதிகளும் சேவைகளில் பங்குபற்றுவதன் மூலம் சம நன்மையைப் பெற அனுமதிப்பதாகும். இது ஒரு சட்டரீதியான பரீட்சை ஆகும், அத்துடன் வேலை வழங்குவோர், தொழிற்சங்கங்கள், வாடகைக்கு விடுவோர், சேவை வழங்குவோர், விசேட ஒழுங்கு செய்தல் மிகவும் செலவானது என அல்லது அது பாரதூரமான ஆரோக்கிய அல்லது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது என நிரூபிக்க வேண்டும்.
விசேட ஒழுங்கு ஒரு பங்கீட்டுப் பொறுப்பு ஆகும். சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் பொருத்தமான தகவல்களைப் பரிமாறுவதுடன் தீர்வுகளைப் பற்றி ஒன்றாகச் சேர்ந்து ஆராய வேண்டும். இதற்கென ஒரு தயார் செய்யப்பட்ட சூத்திரம் இல்லை. விசேட ஒழுங்கு, அனேகருக்கு நன்மையைக் கொடுக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் தனிமனிதனுடையதேவைகள் கருதப்படவேண்டும்.
அனேகமான விசேட ஒழுங்குகளைச் சுலபமாக அல்லது கொஞ்சம் செலவுடன் அல்லது எந்தச் செலவும் இல்லாமல் செய்யலாம். மிகவும் கஷ்டத்தினால் தான் சிறந்த தீர்வு விளைவானாலும் கூட, மிகவும் பொருத்தமானவை வரும் வரைக்கும் அடுத்த சிறந்த படிமுறைகளை எடுக்க வேண்டிய ஒரு கடமை உண்டு.
குடும்ப நிலைத் தேவைகளுள்ள ஒருவராக:
வேலைவழங்குபவருக்கு, தொழிற்சங்கத்துக்கு, வாடகைக்கு விடுபவருக்கு அல்லது சேவை வழங்குபவருக்கு உங்களுடைய குடும்ப நிலை சம்பந்தமான தேவைகளை தேவையான ஆதாரப்படுத்தும் தகவல்களுடன் சொல்லிப் பொருத்தமான தீர்வுகளை ஆராய உதவுங்கள்.
வேலைவழங்குபவராக, தொழிற்சங்கமாக, வாடகைக்கு விடுபவராக அல்லது சேவை வழங்குபவராக:
விசேட ஒழுங்கு பற்றிய வேண்டுதல்களை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். தேவைப்படும் தகவல்களை மட்டும் கேளுங்கள், அத்துடன் அந்த விபரங்களை இரகசியமாகப் பேணுங்கள். முடியுமான விரைவில் ஒரு தீர்வை எடுங்கள், அத்துடன் அனேகமான சந்தர்ப்பங்களில், நிபுணர்களின் அபிப்பிராயம் அல்லது தேவைப்படும் ஆவணங்கள் உட்பட எந்தச் செலவையும் நீங்களே பொறுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் தகவல்களுக்கு
ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (The Ontario Human Rights Commission), குடும்பநிலை காரணமான பாகுபாடு பற்றிய கொள்கை, போன்ற ஏனைய வெளியீடுகள் www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.
மனித உரிமைகள் பற்றிய முறையீடு செய்ய – மனுப் போட – ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றைத் (Human Rights Tribunal of Ontario) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-598-0322
செவிப்புலனற்றவர்களுக்கான கட்டணமற்ற தொலைபேசி (TTY Toll Free):
1-866-607-1240
இணையத்தளம் (Website): www.hrto.ca
உங்களுக்கு சட்ட உதவி தேவையாயின் மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்தை (Human Rights Legal Support Centre) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-625-5179
செவிப்புலனற்றவர்களுக்கான கட்டணமற்ற தொலைபேசி TTY Toll Free:
1-866-612-8627
இணையத்தளம் (Website): www.hrlsc.on.ca