Skip to main content

Gender identity and gender expression (brochure)

ஒன்ராறியோவின் மனித உரிமைகள் சட்டக்கோவை (Ontario’s Human Rights Code)

ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக்கோவை  (The Ontario Human Rights Code ) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதுடன் பாகுபாட்டிலிருந்தும் சுதந்திரம் அளிக்கிறது. இது ஒன்ராறியோவில் உள்ள வேலைவாய்ப்பு, சேவைகளும் வசதிகளும், விசேட இடவசதியும் குடியிருப்பும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வர்த்தக அல்லது தொழில் வல்லுனர் அமைப்புக்கள் போன்றவற்றில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது.

பாலின அடையாளத்துக்கு எதிராக பாகுபடுத்தப்படும் அல்லது தொந்தரவு படுத்தப்படும் மக்கள் “பால் வேறுபாடு” என்ற அடிப்படையின் கீழ் சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றனர். பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு மாற்றுப்பாலியலாளர் (transsexual) மாற்றுப்பாலினத்தவர் (transgender), இருபாலியலாளர்கள் (intersex persons), மாற்றுப்பாலின உடையாளர்கள் (cross-dressers), பிறப்பால் அடையாளப்படுத்தப்பட்ட பாலிலிருந்து வேறுபட்டும் அல்லது வேறுபட்டதாக காணப்பட்டும் இருக்கும் ஏனையோர் போன்ற அனைவரையும் இது உள்ளடக்கும்.

பாலியல் அடையாளம் என்றால் என்ன?

பாலின அடையாளம், ஒருவரது தன்னுணர்வுடனும் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கும் உணர்வுடனும் தொடர்புடையது. ஒருவருடைய பாலின அடையாளம் பாலியல் போக்கிலிருந்து வேறுபட்டது, அதுவும் சட்டக்கோவையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. ஆட்களுடைய பாலின அடையாளம் அவர்களுடைய பிறப்பினால் வழங்கப்பட்ட பாலிலிருந்து வேறுபடலாம், அத்துடன் பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்.

மாற்றுப்பாலினர் (Transgender): ஒன்றுக்கு மேற்பட்ட பாலின வாழ்க்கை அனுபவம் உள்ளவர்கள். இது, தங்களை மாற்றுப்பாலியலாளராக இனம் காண்போர், பாலின பல்வகை வேறுபாட்டுக்குள் (“gender spectrum”) இருப்போர் எனத் தம்மை விபரிப்பவர்கள் அதாவது பெண் அல்லது ஆண் என்ற பிரிவுக்கு வெளியில் வாழ்பவர்கள்  போன்றோரை உள்ளடக்கலாம்.

மாற்றுப்பாலியலாளர் (Transsexual): பிறப்பில் ஒரு பாலினமாக அடையாளம் காணப்பட்டவர்கள், ஆனால் தங்களை வேறாக அடையாளம் காண்போர். ஒமோன் சிகிச்சை (hormone therapy), பாலை வேறாக மாற்றுவதற்கான சத்திரசிகிச்சை, அல்லது வேறு ஏதாவது செய்முறைகளுடாக தாங்கள் உள்வாரியாக உணரப்பட்ட அடையாளத்துக்கு தக்கதாக தங்களுடைய உடல்களை சீரமைக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகளைத் தேடுவார்கள் அல்லது சிகிச்சைகளுக்கு உட்படுவார்கள்

இருபாலியலாளர் (Intersex):  பிறப்பின் போதோ அல்லது பருவமடைந்த பின்போ, அவர்களுடைய உடல் சிறப்பியல்புகளிலிருந்து, ஆண் அல்லது பெண் என இலகுவில் பாகுபடுத்தமுடியாதோர். இந்தச் சொல்  “அலி” (hermaphrodite) என்னும் பொருந்தாத சொல்லைப் பிரதியீடு செய்கிறது.

மாற்றுப்பாலின உடை உடுப்பவர் (Crossdresser):  தனது உணர்வுரீதியான, உளவியல்ரீதியான சேமநிலைகளுக்காக, எதிர் பாலினருடன் பொதுவாக தொடர்புடைய உடைகளை அணிபவர்.

மாற்று (Trans): ஒரு பெண் அல்லது ஆண் என்ற பொதுவான சமுதாய வரைவிலக்கணத்துக்குள் அடங்காமல் வேறுபட்ட அளவீட்டில் இருக்கும் தனியாட்களை விபரிக்கும் ஒரு பதம் இது.

பாகுபாடும் தொந்தரவும்

ஒருவருடைய பால் வேறுபாடு அல்லது பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ ஏனையோரில் அன்றி, ஒருவரில் அல்லது ஒரு குழுவில் பாரத்தைச் சுமத்தல் அல்லது சமுதாயத்தின் மற்ற அங்கத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கிடைக்காமல் செய்தல் அல்லது கிடைக்கும் அளவை மட்டுப்படுத்தல் போன்ற எந்தச் செயலும் பாலின அடையாளத்தின் காரணமான பாகுபாடு ஆகும். இது வெளிப்படையாகவோ அல்லது சூட்சுமமாகவோ இருக்கலாம். பாகுபாடு பெரிய அளவில், அமைப்பு ரீதியாக நடக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு விதி அல்லது கொள்கை நடுநிலைமையானது போன்று தோன்றலாம் ஆனால் அது எல்லோரையும் உள்ளடக்கக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்க மாட்டாது.  இது ஆட்களின் பாலின அடையாளம் காரணமாக அவர்களின் உரிமைகளுக்கு கெடுதி விளைவிக்கலாம்.

தொந்தரவு பாகுபாட்டின் ஒரு வடிவமாகும். இது கருத்துரைகள், பகிடிகள், பட்டம் தெளித்தல் அல்லது நடத்தைகள் அல்லது உங்களுடைய பாலின அடையாளத்தால் உங்களை அவமதிக்கும் தாழ்த்தும் படங்களைக் காட்சிக்கு வைத்தல் போன்றவற்றை உள்ளடக்கும். 

வேலையில், பாடசாலையில், குடியிருப்பை வாடகைக்கு எடுக்கையில், ஒரு உணவகத்தில் ஒரு சாப்பாட்டைச் சாப்பிடுகையில் அல்லது எந்த நேரத்திலாவது அவர்களுடைய பாலின அடையாளத்துக்காக ஒருவரும் வித்தியாசமாக நடத்தப்படக் கூடாது.

உதாரணம்:  ஒரு மாற்றுப்பாலியலாளர் (transsexual) குடியிருப்பு விளம்பரம் ஒன்றுக்கு விண்ணப்பிக்கிறார். அங்கு இருப்பிட அலகுகள் இருந்த போதும் ஒன்றுமே இல்லை என கட்டட அதிகாரி சொல்லல்.

உதாரணம்: ஒரு வேலையாள் தனது முதலாளிக்கு தான் எதிர்ப்பாலினர் போல உடை உடுப்பவர் (cross-dresses) என்று சொல்கிறார். வாடிக்கைக்காரர்களும் சகபணியாளர்களும் அவருடன் செளகரியமாக இருக்கமாட்டார்கள் என்பதால் அவர் இனி பதவி உயர்வுக்கோ அல்லது தொழில் பயிற்சிக்கோ தகுதியானவர் அல்ல என அவருடைய முதலாளி அவருக்குச் சொல்லல்

அமைப்புக்கள் பாகுபாடு காட்டமுடியாது. தொந்தரவு பற்றிய முறைப்பாடுகளை கட்டாயமாகக் கையாளுவதுடன் மாற்று (trans) ஆட்களுக்கு பாகுபாடு அற்ற ஒரு சூழலை வழங்கவேண்டும். இது ஒப்பந்த வேலை செய்யும் ஆட்கள் அல்லது அமைப்புடன் அடிக்கடி தொடர்புகொள்வோர் போன்ற மூன்றாம் தரப்பினர்களையும் (“third parties”) உள்ளடக்கும். தனிமனிதர்கள் அவர்கள் வாழும் பாலினத்தால் அடையாளம் காணப்படவேண்டும், அத்துடன் அவர்கள் வேறு விசேட ஒழுங்குகளைக் (பாதுகாப்பு அல்லது அந்தரங்கம் போன்ற காரணங்களுக்காக) கேட்டால் அன்றி, அதன் அடிப்படையில் கழிவறை, உடைமாற்றும் சேவைகள் போன்றவற்றைப் பெற வழிசெய்யவேண்டும்.   

விசேட ஒழுங்கு வழங்குவதற்கான கடமை

சட்ட விதியின் கீழ், வேலைவழங்குவோர், தொழிற்சங்கங்கள், வாடகைக்கு விடுபவர்கள், சேவை வழங்குவோர் போன்றவர்களுக்கு ஒருவரின் பாலின அடையாளத்தின் காரணமான விசேட ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டிய சட்டரீதியான கடமை உண்டு. இதன் இலட்சியம் என்னவென்றால் வேலை வழங்குவோரும் குடியிருப்பாளர்களும் வாடிக்கைக்காரரும் சேவைபெறுனரும், சேவைகளில், குடியிருப்பில் அல்லது வேலையிடத்தில் பங்குபற்றுவதன் மூலம் சம நன்மையைப் பெற அனுமதிப்பதாகும். 

விசேட ஒழுங்கு ஒரு பங்கிடப்பட்ட பொறுப்பு ஆகும். விசேட ஒழுங்கைக் கேட்கும் நபர் உட்பட, சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் பொருத்தமான தகவல்களைப் பரிமாறுவதுடன் விசேட ஒழுங்குத் தீர்வுகளைப் பற்றி ஒன்றாகச் சேர்ந்து ஆராய்வதன் மூலமும் இந்தச் செயல்முறைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

உதாரணம்:  மாற்றுப்பாலின (transgender) ஆண் ஒருவர், தனது உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள ஆண்கள் பெட்டக அறையில் (locker room) பயப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான கவலையை தெரிவிக்கலாம். உடற்பயிற்சி நிலைய முகாமையாளர் தொந்தரவுக்கு எதிரான படிமுறைகளை எடுப்பதுடன், ஆண்கள் பெட்டக அறையில்,  குளிக்குமிடத்திலும் உடுப்பு மாற்றும் அடைப்புக்களிலும் மறைவுள்ள இடைத்தடுப்புக்கள் அல்லது தனிஉடமை குளிக்குமிடமும் உடுப்பு மாற்றும் அடைப்பும் போடல் போன்ற பொருத்தமான தீர்வுகளை  தனது சேவைபெறுனர்களுடன் ஆராய்கிறார். முடிவான தீர்வு வரும் வரைக்கும் பணியாளர்களின் (staff) வசதிகளைப் பாவிக்கும் வசதியை அவருக்கு அவர்கள் வழங்குகின்றனர்.

உதாரணம்:  மாற்றுப்பாலியளரான (transsexual) ஒரு பெண் அவளுடைய வேலையிடத்தில் பெண்கள் கழிவறையைப் பாவிக்க அனுமதிக்கப்படவில்லை. ஏனைய பணியாளர்கள் அசெளகரியத்தைத் தெரிவித்ததாக அவளுடைய முகாமையாளர் விளக்கம் தெரிவித்து அதை ஆதரித்தார். எதிர்கால தொந்தரவையும் பாகுபாட்டையும் தடுப்பதற்கும் பணியாளர்களின் இடர்பாடுகளை தீர்க்கவும் கல்விபுகட்டப்பட வேண்டிய அதே வேளையில், இந்தக் கழிவறையைப் பாவிக்க மாற்றுப்பாலியல் வேலையாளுக்கு உரிமையிருக்கிறது எனத் தெளிவாகச் சொல்லும் ஒரு கொள்கை இந்த வேலையிடத்துக்குத் தேவை. 

உதாரணம்: இந்த விதமான சோதனைகளை பெண் காவல்துறை அதிகாரிகளே செய்யவேண்டும் எனக் கேட்டிருந்தும் கூட, ஒரு மாற்றுப் (trans) பெண் ஒருவர், ஆண் காவல் அதிகாரி ஒருவரால் நிர்வாணமாகச் சோதனையிடப்பட்டார் (strip-searched). அந்த ஆள் பாலை மாற்றும் சத்திரசிகிச்சையைச் செய்திராத படியால் ஒரு ஆண் அதிகாரி தான் கட்டாயமாக சம்பந்தப்பட வேண்டுமென காவல்துறை சொல்கிறது. நிர்வாணமாகச் சோதனையிடப்படப்போகும் (strip-searched) மாற்று (trans) ஆட்களுக்கு பின்வரும் மூன்று தெரிவுகள் கொடுக்கப்பட வேண்டும் என ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்று (The Human Rights Tribunal of Ontario) தீர்ப்பளித்தது: ஆண் அதிகாரிகளை பாவிப்பது;   பெண் அதிகாரிகளை பாவிப்பது; அல்லது ஆண் அதிகாரியையும் பெண் அதிகாரியையும் சோதிப்பில் ஈடுபடுத்துவது  

தகவல்களை இரகசியாகமாகப் வைத்திருத்தல்   

அவனுடைய அல்லது அவளுடைய வாழும் பாலின அடையாளத்திலிருந்து வேறுபட்ட ஒருவருடைய பால் பாகுபாட்டை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறிப்பிடும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் போன்றவற்றிலிருந்து தனிப்பட்ட தகவல்களை திரட்டவும் பயன்படுத்தவும் ஒரு வேலை வழங்குபவருக்கு அல்லது சேவைவழங்குபவருக்கு  போதிய வலுவுள்ள காரணம் இருக்கவேண்டும். அவர்கள் உச்ச அளவு அந்தரகத்தன்மையையும் இரகசியத்தையும்  (privacy and confidentiality) வழங்கவேண்டும். இது வேலைப் பதிவேடுகளும் கோப்புக்களும்,  காப்புறுதி நிறுவனத்தின் பதிவேடுகள், மருத்துவத் தகவல்கள் போன்ற ஏனைய எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.

மேலும் தகவல்களுக்கு

ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (The Ontario Human Rights Commission), பாலியல் அடையாளத்தால் பாகுபாடும் தொந்தரவும் பற்றிய கொள்கை, போன்ற ஏனைய வெளியீடுகள் www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.

மனித உரிமைகள் பற்றிய முறையீடு செய்ய – மனுப் போட – ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றைத் (Human Rights Tribunal of Ontario) தொடர்பு கொள்ள –
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-598-0322
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி  (TTY Toll Free):
1-866-607-1240
இணையத்தளம் (Website): www.hrto.ca

உங்களுடைய உரிமை பற்றிக் கதைக்க அல்லது உங்களுக்கு சட்ட உதவி தேவையாயின் மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்தை (Human Rights Legal Support Centre) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-625-5179
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி  (TTY Toll Free):
1-866-612-8627
இணையத்தளம் (Website): www.hrlsc.on.ca

ISBN/ISSN
PRINT: | HTML: | PDF:
Attachments