ஒன்ராறியோவின் மனித உரிமைகள் விதி (Ontario’s Human Rights Code)
ஒன்ராறியோவின் மனித உரிமைகள் விதி (The Ontario Human Rights Code) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் அளிப்பதுடன் பாகுபாட்டில் இருந்து சுதந்திரமும் அளிக்கிறது. இந்தச் சட்டவிதி ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கிறது. இது வேலைவாய்ப்பு, குடியிருப்பு, வசதிகளும் சேவைகளும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வணிகம் அல்லது வாழ்க்கைத் தொழில்சார்ந்த அமைப்புக்கள் போன்ற துறைகளுக்கும் பொருந்தும்.
வேலையில், வலுவிழந்த வேலையாளர்கள், வலுவிழப்பு இல்லாத (without disability) வேலையாட்களுக்குள்ள அதே வாய்ப்புக்களுக்கும் நன்மைகளுக்கும் உரித்துடையவர்கள் ஆவார்கள். சில நிலைமைகளில் அவர்களுடைய வேலைக் கடமைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு விசேட ஒழுங்குகளோ அல்லது இடவசதிகளோ தேவைப்படலாம்
வலுவிழந்த வாடிக்கையாளர்களுக்கும் சேவைபெறுனர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும், வசதிகளையும் சேவைகளையும் சமமாகப் பெற்றுக்கொள்ளவும் வசதிகளிலும் சேவைகளிலும் சமமாக நடத்தப்படவும் உரிமை உண்டு. உணவகங்கள், கடைகள், தங்குமிட விடுதிகள், திரைப்பட அரங்குகள் போன்றனவும், குடியிருப்புக் கட்டிடங்கள், போக்குவரத்து, ஏனைய பொதுவிடங்கள் என்பனவும் வசதிகளுக்கும் சேவைகளுக்குமான உதாரணங்கள் ஆகும்.
பொதுக்கல்வி வழங்குவோரும் தனிப்பட்ட கல்வி வழங்குவோரும், தங்களுடைய வசதிகளும் சேவைகளும் பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ளன என்பதையும் வலுவிழந்த மாணவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என்பதையும் கட்டாயமாக உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
வலுவிழப்பு என்றால் என்ன?
“வலுவிழப்பு” பரந்த அளவிலான, வேறுபட்டளவு நிலைமைகளை உள்ளடக்கும், சில கண்ணால் பார்க்கக் கூடியவை, சில கண்ணுக்குத் தெரியாதவை. வலுவிழப்பு பிறப்பிலிருந்தே இருக்கலாம், விபத்தின் காரணமாகவிருக்கலாம், அல்லது காலத்துக்கு ஊடாக விருத்தியடைந்திருக்கலாம். அவை உடல்ரீதியானதாக, மனரீதியானதாக அல்லது கற்பதில், கேட்பதில், பார்வையில் உள்ள குறைபாடாக, அல்லது வலிப்பு, மன நிலை ஒழுங்கீனம் போன்றதாக, அல்லது போதைப் பொருளுக்கும் மதுபானத்துக்கும் அடிமைப்பட்ட நிலையாக அல்லது சூழலுக்கு எதிர்விளைவு காட்டும் நிலையாக அல்லது வேறு நிலைமைகளாக இருக்கும்.
கடந்த கால, நிகழ்கால அல்லது உணரப்படும் வலுவிழப்புகளின் காரணமாக பாகுபடுத்தப்படுவதிலிருந்து மக்களை இந்த விதி பாதுகாக்கிறது. உதாரணத்துக்கு ஒருத்தி மதுபானத்துக்கு அடிமையான நிலையிலிருந்து மீண்டவள் என்ற காரணத்தினால் அவள் பாகுபடுத்தப்படுவதிலிருந்து இந்த விதி பாதுகாக்கிறது. அதே போல் ஒருவருடைய நிலை அவருடைய வேலையிடத் திறன்களை எல்லைப்படுத்தாவிட்டாலும் எதிர்காலத்தில் குறைவாக செய்யக்கூடிய மிகுந்த ஆபத்து நிலையில் இருக்கிறார் என நம்பப்படும் போது அவரையும் இந்த விதி பாதுகாக்கிறது.
தடைகளை அகற்றலும் உள்ளடங்கலாகத் திட்டமிடலும்
வலுவிழந்த ஆட்கள் ஒவ்வொரு நாளும் பலவிதமான தடைகளை எதிர்நோக்குகிறார்கள். அவை உடல் சம்பந்தப்பட்டதாகவோ, நடத்தை சம்பந்தப்பட்டதாகவோ,அமைப்பு சார்ந்ததாகவோ இருக்கலாம். தனிப்பட்ட விசேட ஒழுங்கமைப்பு வேண்டுதல்களுக்கு அல்லது முறையீடுகளுக்கு பதில் சொல்லும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக தடைகளைத் தானாகவே அடையாளம் கண்டு அகற்றுதல் சிறந்தது ஆகும்.
தடைகளை அடையாளம் காணலும் அகற்றலும் நல்லதொரு வியாபார உத்தியாகவும் அமையும். வலுவிழந்த வாடிக்கையாளர்களின், வேலையாட்களின் தேவைகளை நிறைவேற்றும் போது அது இளம் பிள்ளைகளுள்ள குடும்பங்கள், முதியோர் போன்ற ஏனையோருக்கும் உதவி செய்யலாம்.
எவ்வகையான தடைகள் இருக்கின்றன என அறிய, வேலைவழங்குவோரும் தொழிற்சங்கங்களும் சேவைவழங்குவோரும், தங்களுடைய வசதிகளும் சேவைகளும் நடைமுறைகளும் இலகுவாகப் பெறக்கூடிய நிலையில் இருக்கின்றனவா என மீளாய்வு செய்யத் தொடங்கலாம். பிறகு நீங்கள் தடைகளை அகற்றலை ஆரம்பிக்க எளிதில் அணுகக்கூடிய திட்டம் (accessibility plan ) ஒன்றை உருவாக்கலாம்.
எளிதில் அணுகக்கூடிய கொள்கை (accessibility policy) ஒன்றையும் முறைப்பாட்டு நடைமுறை ஒன்றையும் உருவாக்கலும் உதவியாகவிருக்கும். இந்தப் படிமுறைகள், இருக்கும் தடைகளை அகற்றவும், புதிதாக ஒன்றை உருவாக்கலைத் தடுக்கவும் உதவும். தடைகளைத் தடுக்கச் சிறந்த வழி உள்ளடங்கலான (inclusively) திட்டமிடலாகும். இதன் கருத்து என்னவென்றால் புதிய வசதிகளைத் திட்டமிடும் போது, திருத்தியமைக்கும் போது, மின் கணிணிகளை அல்லது ஏனைய உபகரணங்களை வாங்கும் போது, இணையத்தளம் ஒன்றை ஏற்றும் போது, கொள்கைகளை அல்லது நடைமுறைகளை உருவாக்கும் போது, அல்லது புதிய சேவையை வழங்கும் போது, வலுவிழந்த மக்களுக்கு புதிய தடைகளை உருவாகாது தடுக்கக் கூடியதாக உங்களுடைய தெரிவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தடைகள் வெறுமன சடப்பொருளாக மட்டும் இருப்பதில்லை. வலுவிழந்தோருக்கு எதிரான பாகுபாட்டைத் (“ableism”) தடுப்பதற்கான படிமுறைகள் எடுத்தல் – வலுவிழந்த மக்களின் ஆற்றலைக் குறைவாக மதிப்பிடும் அல்லது எல்லைப்படுத்தும் சமுதாய மனப்பாங்கை –
வலுவிழந்த மக்கள் மேல் மரியாதையையும் கெளரவத்தையும் ஊக்குவிக்க உதவுவதுடன் சமுதாய வாழ்வில் முழுமையாகப் பங்குகொள்ளவும் உதவும்.
விசேட ஒழுங்குசெய்ய வேண்டிய கடமை (The duty to accommodate)
வசதிகளும் சேவைகளும் முடியுமான விதத்தில் உள்ளடங்கலாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும் கூட, வலுவிழந்த சிலருடைய தனிப்பட்ட தேவைகளுக்கு விசேட ஒழுங்கு செய்துகொடுக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கலாம். விதியின் படி, வலுவிழந்தவர்களுக்கு விசேட ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டிய சட்டரீதியான கடமை, தொழிற்சங்கங்களுக்கும் வாடகைக்கு விடுபவர்களுக்கும் சேவை வழங்குபவர்களுக்கும் உள்ளது. வலுவிழந்த மக்கள், சேவைகளில், குடியிருப்புக்களில் அல்லது வேலையிடத்தில் சமமான நன்மை பெறுவதையும் பங்கு கொள்ளலையும் அனுமதித்தலே, விசேட ஒழுங்கு செய்து கொடுத்தலின் இலட்சியமாகும்.
விசேட ஒழுங்கு ஒரு பங்கீட்டுப் பொறுப்பு ஆகும். விசேட ஒழுங்கைக் கேட்கும் ஆள் உட்பட, சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் கட்டாயமாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும், பொருத்தமான தகவல்களைப் பரிமாறுவதுடன் தீர்வுகளைப் பற்றி ஒன்றாகச் சேர்ந்து ஆராய வேண்டும்.
வலுவிழந்த ஆட்களுக்கு விசேட ஒழுங்கு செய்யவென ஒரு தயார் செய்யப்பட்ட சூத்திரம் இல்லை. விசேட ஒழுங்கு, நிறையப் பேருக்கு நன்மையைக் கொடுத்தாலும், ஒவ்வொரு முறையும் ஒருவர் விசேட ஒழுங்கைக் கேட்கும் போது, தனிமனிதனுடையதேவைகளை நீங்கள் கருதவேண்டும். ஒருவருக்கான தீர்வு இன்னொருவருக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம்.
விசேட ஒழுங்குக்கான சில உதாரணங்கள் உள்ளடக்குவன:
- வேலைநேரத்திலும் இடைவேளை நேரத்திலும் அதிகரிக்கப்பட்ட மாற்றக்கூடியதன்மை (flexibility)
- படங்கள் சேர்ந்த எழுத்துக்கள், பார்வையற்றோருக்கான எழுத்துக்கள், பெரிய அளவிலான எழுத்துக்கள் என வேறுபட்ட வடிவங்களில் உள்ள வாசிப்புப் பொருள்கள் கொடுத்தல்
- காது கேட்காமல் பிறந்த, காது கேட்காமல் போன அல்லது காது கேட்பதில் கஷ்டம் உள்ளவர்களுக்கு சைகை மூலம் கதைக்கும் உரைபெயர்ப்பாளர்களை அல்லது உடனடியாகப் பார்க்கக் கூடிய படமூல விளக்கம் கொடுத்தல். அப்படியானால் அவர்களும் கூட்டங்களில் பங்குபெற்றலாம்.
- தானாகத் திறக்கும் கதவுகளைப் போடலும் வேலையிடத்தில் அல்லது கூட்டுமனைகளின் (condominium) பொதுவிடங்களில் உள்ள கழிவறைகளை இலகுவாக அணுகத்தக்கதான (accessible) வசதி செய்தலும்
- சில சூழல்களில் வேலைக் கடமைகளை மாற்றல், மீளப்பயிற்சி கொடுத்தல் அல்லது ஒருவருக்கு வேறு ஒரு வேலை வழங்கல்
அனேகமான விசேட ஒழுங்குகளைச் சுலபமாக, கொஞ்சம் செலவுடன் செய்யலாம். சில நேரங்களில் சிறந்த தீர்வை உடனடியாகக் காணல், செலவு, ஆரோக்கியம், பாதுகாப்பு போன்ற காரணிகளால் மிகவும் கஷ்டத்தைத் தரலாம். அப்படி நடந்தாலும் கூட, மிகவும் கஷ்டம் தராத, அடுத்த சிறந்த படிமுறைகளை தேடவும் எடுக்கவும் வேண்டிய ஒரு கடமை உங்களுக்கு உண்டு. முழுமையாகவோ அல்லது கட்டங்களாக போடக்கூடிய, மிகவும் பொருத்தமான தீர்வுகள் வரும் வரைக்கும் மட்டுமே அந்தப் படிகள் கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும்.
விசேட ஒழுங்கு செய்யும் பொறுப்புக்கள்
வலுவிழந்த ஒருவராக:
- உங்களுடைய வேலைக் கடமை, குடியிருப்பு, அல்லது வழங்கப்படும் சேவை தொடர்பாக, உங்களுடைய வலுவிழப்புச் சம்பந்தமான தேவைகள் என்னவென்று உங்களுடைய வேலை வழங்குனருக்கு, தொழிற்சங்கத்துக்கு, குடியிருப்புச் சொந்தக்காரருக்கு அல்லது சேவை வழங்குனருக்குச் சொல்லுங்கள்
- தேவையான இடங்களில், மருத்துவ அல்லது வேறு நிபுணர்களின் அபிப்பிராயங்கள் உள்ளடங்கலாக, உங்களுடைய வலுவிழப்புத் தொடர்பான தேவைகள் பற்றிய ஆதாரப்படுத்தும் தகவல்களை வழங்குங்கள்
- பொருத்தமான, விசேட ஒழுங்குத் தீர்வுகளை காண்பதில் பங்குகொள்ளுங்கள்
ஒரு வேலை வழங்குபவராக, தொழிற்சங்கமாக, வாடகைக்கு விடுபவராக அல்லது சேவை வழங்குபவராக:
- வேலையாட்களினதும், குடியிருப்பவர்களினதும் வாடிக்கைக்காரர்களினது விசேட ஒழுங்கு பற்றிய வேண்டுதல்களை நம்பிக்கையுடன் (good faith) ஏற்றுக் கொள்ளுங்கள்.
- விசேட ஒழுங்கு வழங்க உங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை மட்டும் கேளுங்கள். உதாரணத்துக்கு ஒரு வேலையாளின் பார்வை இழப்பு அச்சுப் பதிவுகள் பாவிப்பதைத் தடை செய்கிறதா என நீங்கள் அறிய வேண்டும் ஆனால் அவர்களுக்கு சலரோகம் இருக்கிறதா என உங்களுக்குத் தெரியத் தேவையில்லை.
- தனிப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யத் தேவையான விசேட ஒழுங்குத் தீர்வுகளைக் காண்பதில் தீவிர பங்கு கொள்ளுங்கள்.
- நீண்ட காலத் தீர்வை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு இடைக்காலத் தீர்வையாவது எடுப்பதன் மூலம், விசேட ஒழுங்குகள் சம்பந்தமான வேண்டுதல்களுக்கு முடியுமான விரைவில் நடவடிக்கை எடுங்கள்.
- விசேட ஒழுங்கைக் கேட்கும் ஆளினது கெளரவத்துக்கு மதிப்பளியுங்கள் அத்துடன் தகவல்களை இரகசியமாகப் பேணுங்கள்.
- மருத்துவர்களின் அல்லது ஏனைய நிபுணர்களின் அபிப்பிராயம் அல்லது ஆவணங்கள் உட்பட தேவைப்படும் எந்த விசேட ஒழுங்குச் செலவுகளையும் நீங்களே பொறுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் தகவல்களுக்கு
கல்வி, உணவகங்கள், கட்டிட விதி, பொதுப்போக்குவரத்து, முதியோர் போன்ற துறைகளில் வலுவிழப்புப் பிரச்சனை பற்றிப் பேசும், ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (The Ontario Human Rights Commission), வலுவிழப்பும், விசேட ஒழுங்குக்கான கடமையும் பற்றிய கொள்கைகள். வழிமுறைகள், வேலையில் மனித உரிமைகள் போன்ற ஏனைய கொள்கைகள் , வழிகாட்டிகள், அறிக்கைகள், சமர்ப்பிப்புக்கள் என்பவற்றிலிருந்து தகவல் பெறுங்கள். இவை OHRC ன் www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.
இந்தக் கொள்கையும் இந்தக் கையேடும் வலுவிழந்த மக்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் மரபொழுங்கைப் (the United Nations Convention (CRPD)) பின்பற்றுகின்றன.
மேலும் தகவல்களுக்கு: www.un.org/disabilities.
மனித உரிமைகள் பற்றிய முறையீடு செய்ய – மனுப் போட – ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றைத் (Human Rights Tribunal of Ontario) தொடர்பு கொள்ள –
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-598-0322
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி (TTY Toll Free):
1-866-607-1240
இணையத்தளம் (Website): www.hrto.ca
உங்களுக்கு சட்ட உதவி தேவையாயின் மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்தை (Human Rights Legal Support Centre) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-625-5179
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி (TTY Toll Free):
1-866-612-8627
இணையத்தளம் (Website): www.hrlsc.on.ca